கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 31 மார்ச், 2012

அதியமான் போலும் பிரபாகரன்

பாடியவர்: ஒளவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.


சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!


சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

குறைவான கள் கிடைத்தாலும் அதை யாம் உண்டு பாட எஞ்சியதைத் தான் மகிழ்ந்து உண்பான். (நான் விரும்பும் மன்னன்)

சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானலும் நனிபல கலத்தன்; மன்னே!

சோறு எல்லோருக்கும் பொதுவாதலால் சிறிய சோறானாலும் அதை பலருடன் உண்பான். மிக அதிகமான சோற்றிலும் மிக கலத்தோடும் உண்பான்

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!

எலும்போடு கூடிய தசையிறைச்சித் துண்டை எமக்குத் தருவார். அம்போடு வேல் நுழைகின்ற இடமெல்லாம் (போர்க்களநிலையிலும் ) முன்னிற்பான்

நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே

நரந்தம் பூ மணக்கும் அவனுடையைய கையால் புலால் மணக்கும் (தீய மணம்) வீசும் தலையை அன்புடன் தடவுவான்(தாய்போல எண்ணி)

அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!

அரிய தலையையுடைய பெரிய பாணரின் அகன்ற தலையில் துளைத்து இரப்பவரின் கையுள்ளும் தைத்துத் தன்னால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் புன்மையான கண்பார்வைஒளி குன்ற அழகிய சொல்லை ஆராயும் நுட்பமான ஆராய்ச்சியையுடைய அறிவை உடையவரின் நாவில் போய் விழுந்தது கொடிய போர் வேல்.


ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;

எமக்கு ஆதரவாக இருந்த தலைவன் எவ்விடத்துள்ளான். இனிப் பாடுவோரும் இல்லை. பாடுபவருக்கு ஒன்றைத் தருபவரும் இல்லை

பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!

குளிர்ந்த நீரையுடைய நீர்த்துறையில் பகன்றை(பூ) என்ற தேன் பொருந்திய பெரிய மலர் மற்றவரால் சூடப்படாமல் கழிந்ததைப் போல் பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்காமல் இறந்து போகின்ற உயிர்கள் இந்நாட்டில் மிகப்பலவாகும்.


பொருளுரை:
குறைவான கள்(சிறிய அளவிலான கஞ்சி) கிடைத்தாலும் அதை யாம் உண்டு பாட எஞ்சியதைத் தான் மகிழ்ந்து உண்பான்(நான் விரும்பும் மன்னன்).சோறு எல்லோருக்கும் பொதுவாதலால் சிறிய சோறானாலும் அதை பலருடன் உண்பான். மிக அதிகமான சோற்றிலும் மிக கலத்தோடும் உண்பான்.எலும்போடு கூடிய தசையிறைச்சித் துண்டை எமக்குத் தருவான். அம்போடு வேல் நுழைகின்ற இடமெல்லாம் (போர்க்களநிலையிலும் ) முன்னிற்பான்.நரந்தம் பூ மணக்கும் அவனுடையைய கையால் புலால் மணக்கும் (தீய மணம்) வீசும் தலையை அன்புடன் தடவுவான்(தாய்போல எண்ணி).அரிய தலையையுடைய பெரிய பாணரின் அகன்ற தலையில் துளைத்து இரப்பவரின் கையுள்ளும் தைத்துத் தன்னால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் புன்மையான கண்பார்வைஒளி குன்ற அழகிய சொல்லை ஆராயும் நுட்பமான ஆராய்ச்சியையுடைய அறிவை உடையவரின் நாவில் போய் விழுந்தது கொடிய போர் வேல். எமக்கு ஆதரவாக இருந்த தலைவன் எவ்விடத்துள்ளான். இனிப் பாடுவோரும் இல்லை. பாடுபவருக்கு ஒன்றைத் தருபவரும் இல்லை. குளிர்ந்த நீரையுடைய நீர்த்துறையில் பகன்றை(பூ) என்ற தேன் பொருந்திய பெரிய மலர் மற்றவரால் சூடப்படாமல் கழிந்ததைப் போல் பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்காமல் இறந்து போகின்ற உயிர்கள் இந்நாட்டில் மிகப்பலவாகும்.

கருத்துகள் இல்லை: