கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 31 மார்ச், 2012

விருந்தோம்பற் குடிமகன் பெருஞ்சாத்தன்

பாடியவர்: மதுரை நக்கீரர்.
பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.

மென்புலத்து வயல்உழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு
நெடுவாளைப் பல்உவியல்
பழஞ்சோற்றுப் புகவருந்திப்
புதல்தளவின் பூச்சூடி
அரில்பறையாற் புள்ளோப்பி
அவிழ்நெல்லின் அரியலாருந்து
மனைக்கோழிப் பைம்பயி ரின்னே,
கானக்கோழிக் கவர்குரலொடு
நீர்க்கோழிக் கூப்பெயர்க் குந்து
வேயன்ன மென்தோளால்
மயில்அன்ன மென்சாயலார்
கிளிகடி யின்னே
அகல்அள்ளற் புள்இரீஇ யுந்து
ஆங்கப் பலநல்ல புலன்அணியும்
சீர்சான்ற விழுச்சிறப்பின்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்
தன்கடைத் தோன்றி என்உறவு இசைத்தலின்
தீங்குரல்...கின் அரிக்குரல் தடாரியொடு
ஆங்கு நின்ற எற்கண்டு
சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கித் தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி இவனை
என்போல் போற்று என்றோனே அதற்கொண்டு
அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே
அகன்ஞாலம் பெரிது வெம்பினும்
மிகவா னுள்எரி தோன்றினும்
குளமீ னோடும்தாள் புகையினும்
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி
விளைவுஒன்றோ வெள்ளம் கொள்கஎன
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன்தாளே!

மென்புலத்து வயல்உழவர்
மென்புலமான (மருதநிலத்து) வயல்களில் (தொழில் செய்யும்) உழவர்

வன்புலத்துப் பகடுவிட்டுக்
வன்புலமான (முல்லை நிலத்தில்) எருதுகளை மேயவிட்டு

குறுமுயலின் குழைச்சூட்டொடு
(காட்டு) முயலின் சுடுஇறைச்சியுடனே(குளம்புக்கறி)

நெடுவாளைப் பல்உவியல்
நீளவாளைமீன் அவியலை

பழஞ்சோற்றுப் புகவருந்திப்
பழஞ்சோற்றுணவுடன் உண்பர்;

புதல்தளவின் பூச்சூடி
புதரில் பூத்த தளவமுல்லைப் பூவைச்சூடி

அரில்பறையாற் புள்ளோப்பி
கிணைப்பறை ஒலியெழுப்பி (நெல்மணிகளைத் தின்னும்) பறவைகளை துரத்துவர்

அவிழ்நெல்லின் அரியலாருந்து
நெற்சோற்றினின்று வடிக்கப்பட்ட கஞ்சியைக் குடிக்கும்

மனைக்கோழிப் பைம்பயி ரின்னே
இல்லத்தில்கோழியின் அழைப்பினால்

கானக்கோழிக் கவர்குரலொடு
காட்டுக்கோழி (தன்) கவர்ந்த குரலை உயர்த்தியும் அழைக்கும்;

நீர்க்கோழிக் கூப்பெயர்க் குந்து
புள்ளினங்கள் அங்கிருந்து நீங்கியோடும்

வேயன்ன மென்தோளால்
மூங்கில் தோள்களையுடைய

மயில்அன்ன மென்சாயலார்
மயிலின் மெல்லிய சாயலையுடைய பெண்டிர்

கிளிகடி யின்னே
கிளிகளைத் துரத்துவராயின்

அகல்அள்ளற் புள்இரீஇ யுந்து
அகன்ற சேற்றில் நின்ற நாரைகளும் நீங்கியோடும்;

ஆங்கப் பலநல்ல புலன்அணியும்
சீர்சான்ற விழுச்சிறப்பின்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!


பலவாகிய நல்ல விளை புலன்கள் சூழ்ந்திருக்கும் மிக்க செல்வச்சிற்ப்பும் சிறிய யானைகளையும் உடைய பெறுவதற்கு அரிய தித்தன் என்பவனின் கெடாத நல்ல புகழ் பொருந்திய உறையூர்க்கிழக்கே நீண்ட கைகளையுடைய வேண்மானுக்கு உரிய காவல் பொருந்திய பிடவூருக்குரிய அறத்தால் உண்டான புகழையுடைய சாத்தனின் கிணைப் பெருநர் ஆவோம்
பெரும!
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
முன்நாள் நண்பகலில் வெம்மையால் நொந்து

கதிர்நனி சென்ற கனையிருள் மாலை
ஞாயிற்றின் செங்கதிர் கழிதலால் செறிந்த இருள் பரவிய மாலை நேரத்திலே

தன்கடைத் தோன்றி என்உறவு இசைத்தலின்
தன்வீட்டு முற்றத்தில் நின்று வந்திருக்கும் முறையாலின்

தீங்குரல்...கின் அரிக்குரல் தடாரியொடு
இனிய இசையான குரலையுடைய தடாரியோடு

ஆங்கு நின்ற எற்கண்டு
அங்கு நின்ற என்னை கண்டு

சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
சிறிது போதும் தாழ்த்தாமலும் மிகுதியாய்ப் பேசுதலும் இல்லாது

அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
அரிய அணிகலன்களைத் தந்து வரவிடுபவனாய் விரும்பி

ஐயென உரைத்தன்றி நல்கித்
"ஐ" எனச்சொல்லி மென்மையான சில சொற்களைச் சொல்லியது மட்டுமன்ரி(என்னிடம் அருள் கொண்டு)

தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி
இவனை
என்போல் போற்று என்றோனே அதற்கொண்டு
அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே

பொன்போன்ற தன்மனையாளையழைத்து இவரை என் உறவினன் போல் பேணுவீராக என்றவனை இனி நான் மறபேனோ? அவனை எண்ணிய மனத்தால் வேறு எவரையும் நினைப்பேனோ?

அகன்ஞாலம் பெரிது வெம்பினும்
அகன்ற உலகம் வரட்சியால் வாடினாலும்

மிகவா னுள்எரி தோன்றினும்
மிகவாக எரிகோள்கள் தோன்றினாலும்

குளமீ னோடும்தாள் புகையினும்
குளமீனும்(விண்மீன்கள்) தாள்மீனும்(வால்விண்மீன்கள்) எரிந்து புகைந்தாலும்

பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பெருவளமாக கொக்கின் நகங்களை போன்ற நெல்லரிசிச் சோற்றைப்

பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி
பசிய துண்டுகளான பொரிக்கறியும் சூட்டிறைச்சியும் உண்டு

விளைவுஒன்றோ வெள்ளம் கொள்கஎன
விளையக் கொள்க(எனச் சான்றோர் வாழ்த்துமாறு)

உள்ளதும் இல்லதும் அறியாது
உள்ளது இது என்றும் இல்லாத்து இது பாராமல்

ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன்தாளே!
வரையாமல் கொடுத்தலில் அமைந்தது அவனது தாளாண்மை. அது வாழ்க!

பொருளுரை:

மென்புலமான (மருதநிலத்து) வயல்களில் (தொழில் செய்யும்) உழவர், வன்புலமான (முல்லை நிலத்தில்) எருதுகளை மேயவிட்டு,(காட்டு) முயலின் சுடு இறைச்சியுடனே (குளம்புக்கறி) நீளவாளைமீன் அவியலை பழஞ்சோற்றுணவுடன் உண்பர்; புதரில் பூத்த தளவ முல்லைப் பூவைச்சூடி கிணைப்பறை ஒலியெழுப்பி (நெல்மணிகளைத் தின்னும்) பறவைகளை துரத்துவர். நெற்சோற்றினின்று வடிக்கப்பட்ட கஞ்சியைக் குடிக்கும் இல்லத்தில் கோழியின் அழைப்பினால் காட்டுக்கோழி (தன்) கவர்ந்த குரலை உயர்த்தியும் அழைக்கும். மூங்கில் தோள்களையுடைய மயிலின் மெல்லிய சாயலையுடைய பெண்டிர் கிளிகளைத் துரத்துவராயின் அகன்ற சேற்றில் நின்ற நாரைகளும் நீங்கியோடும். பலவாகிய நல்ல விளை புலன்கள் சூழ்ந்திருக்கும் மிக்க செல்வச்சிறப்பும் சிறிய யானைகளையும் உடைய பெறுவதற்கு அரிய தித்தன் என்பவனின் கெடாத நல்ல புகழ் பொருந்திய உறையூர்க்கிழக்கே நீண்ட கைகளையுடைய வேண்மானுக்கு உரிய காவல் பொருந்திய பிடவூருக்குரிய அறத்தால் உண்டான புகழையுடைய சாத்தனின் கிணைப் பெருநர் ஆவோம். பெரும! முன்நாள் நண்பகல் வெம்மையால் நொந்து ஞாயிற்றின் செங்கதிர் கழிதலால் செறிந்த இருள் பரவிய மாலை நேரத்திலே தன்வீட்டு முற்றத்தில் நின்று வந்திருக்கும், இனிய இசையான குரலையுடைய தடாரியோடு அங்கு நின்ற என்னை கண்டு, சிறிது போதும் தாழ்த்தாமலும் மிகுதியாய்ப் பேசுதலும் இல்லாது அரிய அணிகலன்களைத் தந்து வரவிடுபவனாய் விரும்பி "ஐ" எனச்சொல்லி மென்மையான சில சொற்களைச் சொல்லியது மட்டுமன்றி(என்னிடம் அருள் கொண்டு), பொன்போன்ற தன்மனையாளையழைத்து இவரை என் உறவினன் போல் பேணுவீராக என்றவனை இனி நான் மறபேனோ? அவனை எண்ணிய மனத்தால் வேறு எவரையும் நினைப்பேனோ? அகன்ற உலகம் வரட்சியால் வாடினாலும் மிகவாக எரிகோள்கள் தோன்றினாலும் குளமீனும்(விண்மீன்கள்) தாள்மீனும்(வால்விண்மீன்கள்) எரிந்து புகைந்தாலும் பெருவளமாக கொக்கின் நகங்களை போன்ற நெல்லரிசிச் சோற்றைப்பசிய துண்டுகளான பொரிக்கறியும் சூட்டிறைச்சியும் உண்டு "விளையக் கொள்க!(எனச் சான்றோர் வாழ்த்துமாறு) உள்ளது இது என்றும் இல்லாதது இது என்றும் பாராமல் (வரையாமல்) கொடுத்தலில் அமைந்தது அவனது தாளாண்மை. அது வாழ்க!

நன்றி:படம்
http://ssmunish.blogspot.com

கருத்துகள் இல்லை: