கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

வள்ளுவரின் வீடு


வீடுதோறும் கலையின் விளக்கம் 
- 2-
ஒரு வீட்டிற்குள் என்ன இருக்கிறது? பாரதியார்  சொல்கிறார்:
ஒற்றைக் குடும்பம் தனிலே – பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை!
மற்றைக் கருமங்கள் செய்தே – மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை!!
ஏவல்கள் செய்பவர் மக்கள் - இவர்
யாவரும் ஓர் குலம் அன்றோ?
ஆனால் நவீன வீடு மிகவும் மாறி விட்டிருக்கிறது. தாயும் பொருள் ஓங்க வளர்க்கிறாள்; தந்தையும் மற்றைக் கருமங்கள் செய்கிறார்.

வள்ளுவரின் வீட்டைப் பாருங்கள். அங்கே குடும்பத் தலைவன் தனது மனைவி, பெற்றோர், குழந்தைகளுக்கு உற்ற துணையாக விளங்குகிறான்:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (குறள் 41)
தனது முன்னோர், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் என்ற ஐந்து வகையினரையும் அறநெறி தவறாமல் அவன் காப்பாற்றுகிறான்:
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத் தார்ஓம்பல் தலை. (குறள் 43)

குடும்பத்தலைவி தன்னையும் காத்து, தன் கணவனையும் பேணி, பெருமை நிறைந்த புகழையும் காத்துத் தருகிறாள்:
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (குறள் 56)
இப்படிபட்ட கணவனும், மனைவியும் பெறக்கூடிய செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம் அறிய வேண்டியவைகளை அறியும் ஆற்றலுள்ள நல்ல குழந்தைகளைப் பெறுவதுதான்:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கள்பேறு அல்ல பிற. (குறள் 61)

இந்தப் பொறுப்பான, உயர்ந்த பெற்றோர் தங்கள் பச்சைக் குழந்தைகளின் “சிறுகை அளாவிய கூழ்” அமுதத்தைவிட இனியது (அமிழ்தினும் ஆற்ற இனிதே) என்பதை உணர்ந்திருக்கிறார்கள் (குறள் 64). அந்தக் குழந்தைகளின் மழலைச் சொல் குழலை விட, யாழை விட இனிது என்று தெரிந்திருக்கிறார்கள் (குறள் 66). தம் குழந்தைகளின் உடல்களைத் தீண்டி இன்பம் அடைவது போல, அவர்கள் சொல் கேட்டு செவி இன்பத்தையும் நுகர்கிறார்கள்:
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் 65)
நல்லதொரு வீட்டில் நடக்கும் நயமானக் குழந்தை வளர்ப்பில் “மெய் தீண்டல்,” “சொல் கேட்டல்” போன்றவை எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவரானதும், தந்தை தன் மகனை/மகளை சான்றோர் சபையில் முந்தியிருக்கச் செய்கிறார்:
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல். (குறள் 67)
அதுபோல, தன் குழந்தையை உயர்ந்தவர் எனக் கேட்கும் தாய், தான் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த நேரத்தைவிட பெரிதும் மகிழ்கிறார்:
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள் 69)
இப்படிப்பட்ட அருமையான தாயையும், தந்தையையும் பெற்ற மகன்/மகள் இவன் தந்தை எவ்வளவு பெரிய பாக்கியவான், இவள் தாய் எவ்வளவு பெரிய பாக்கியவதி என்று ஊரார் புகழும்படியாக நடந்து கொள்கிறார்கள்:
மகன் தந்தைக்குஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70)

இப்படிப்பட்ட ஓர் அற்புதமான வீட்டை நாம் அமைத்துக் கொள்வதில் பரந்துபட்ட சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்கிறது என்றாலும், அறுதிப் பெரும்பான்மையான பங்கு அந்தந்த வீட்டாருக்கே உள்ளது. இந்த வீட்டை வடிவமைக்கும் பணியில் பிறரின் தலையீடுகள் வரலாம், ஆனால் நம்மை யாரும் முழுவதுமாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது. “கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்” என்பதை வெறும் பொருளாதார கோணத்திலிருந்து பார்க்கிறோம் நாம். அது தவறான அணுகுமுறை என்றே நினைக்கிறேன். ஒரு வள்ளுவரின் வீட்டைக் கட்டும், கட்டியெழுப்பும், கட்டிக்காக்கும், கையாளும், கரையேற்றும் கலையைத்தான், அதிலுள்ள கடினங்களைத்தான் அப்படிச் சுட்டியிருக்க வேண்டும் நம் முன்னோர். அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, அடுத்தவரை, ஏனையோரைப் பழித்துக் கொண்டிருப்பதைவிட, நம் வீட்டைக் கட்டும் செயலில் நாம் இறங்குவதுதான் சிறப்பு. அந்த சீரிய பணியை நாம் கையிலெடுப்பதும், நம் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் பொறுப்பு.


நன்றி.
S.p. Udayakumar


கருத்துகள் இல்லை: