கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்துக்குமரன்





மாவீரன் முத்துக்குமரனின் தந்தை இப்படத்தின் இடப்பக்கத்தில்


தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்

தொப்புள் கொடியில்
உயிர்க் கொடி
ஏற்றிய தோழா
ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!

இணையத்திலே உன் அழகிய
முகம் பார்த்தோம்
இதயத்திலே கருகிப் போனது
எங்கள் மனம்!

எவ்வளவு இளகிய
மனம் கொண்டவன் நீ
எங்களுக்காய்...
ஏன் கருகிப் போனாய்?

தூத்துக்குடியில்
முத்துக் குளித்தவன் நீ
சாஸ்திரி பவனில்
ஏனையா தீக்குளித்தாய்?

குடம் குடமாய்
நாங்கள் அழுது வடித்த
எங்கள் கண்ணீரில்
உன் முகமே பூக்கிறது!

எம் தமிழ்மீது
நீ கொண்ட பற்றுக்கு
எல்லையே இல்லை என்பதை
இப்படியா உணர்த்துவது!

தமிழினத் தலைவர்கள்
என்று சொல்லத் துடிக்கும்
எங்கள் தலைவர்களின்
நாக்கை அறுத்தாய் நீ!

கையாலாகாத பரம்பரை
என நினைத்தாயோ
பூவாய் இருந்தவன் நீ
புயலாய் ஏன் வெடித்தாய்?

முப்பது ஆண்டுகள்
நாம் சுமந்த வலிகள்
போதாத ஐயா
ஏனையா எரிந்து போனாய்?

பெரு வலியோடு
உனைப் பெற்ற தாயை
எந்த முகத்தோடு போய்
நாங்கள் இனிப் பார்ப்போம்

எட்டாத தூரத்தில்
வாழ்ந்தாலும்
வாகை மரம் போல
வாடிப் போய் நிற்கிறோம்

மண்ணெணையை
உன் மீது ஊற்றி
தமிழ்மண்ணைக் காக்க
ஏனையா உனைக் கொடுத்தாய்?

தமிழீழம் வாழவே
எங்களை வாழ்த்தி
உன் வாழ்வை
ஏனையா நீ அழித்தாய்?

மரணத்திடம் மண்டியிடாமல்
மண் எங்கும் ஓடுகிறோம்
மரணத்தை தேடி நீ
ஏனையா ஓடினாய்?

தமிழீழ வரலாற்றில்
முத்தான உன் பெயர்
இனி எழுத்தாணிகளின்
முதல் வரியாகட்டும்!

உன் தியாகத்தின் முன்
நாங்கள் வெறும் சருகுகளே!
தமிழகத்தின் தாய்மடியில்
கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!

வசீகரன்
நோர்வே
29.01.09

நன்றி வசீகரன்

கருத்துகள் இல்லை: