கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 24 ஜூன், 2007

ஊர்மனை

*

எனது தாத்தா மண்ணைத் தோண்டினார்

தங்கம் கிடைத்தது

எனது அப்பா மண்ணைத் தோண்டினார்

தண்ணீர் கிடைத்தது

நான் மண்ணைத் தோண்டுகிறேன்

வெடிகுண்டுகள் கிடைக்கின்றன

எனது மகன் மண்ணைத் தோண்டும் போது

எலும்புக்கூடுகள் தான் கிடைக்கும்

*

  • அம்மானைக்கொண்டு ஆப்புவைக்கலாம் எண்டு பாருங்கோ சிங்களவர் நினைத்தவயள், ஆனால் இருட்டிலும் புலிக்கண் விழிப்பாய் இருக்கும் பாருங்கோ! அம்மானைப்போல ஆயிரம் பேரை கண்டவர் பாருங்கோ தலைவர் பிரபாகரன்; எல்லா இரண்டர்களும் கும்மாளம் கொட்டேக்கில, இவயளுகு !அ! எல்லாளன் தான் சரியான ஆள் சிங்களத்தாரின் தலையில ஆப்பிறக்கினார் ஆப்பு. புலிக்கே புல்லா?
  • சிரித்துக்கொண்டே தமிழர் மனுவை வாங்குகிறார்கள் பாருங்கோ (வெள்ளையர்கள்) சிந்திக்காமலே பணத்தைக்கொடுக்கிறார்கள் காணும் சிறிலங்காவுக்கு. இது தான் சொல்லுவார்கள் எங்கட படியாத சுருட்டுச்சுத்துகற கைநாட்டுகள் "சிரித்துக்கொண்டே கழுத்தறுப்பான் பார்த்துக்கொள்". அதிலும் நோர்வேகாரன் வலு கெட்டிக்காரன்.
  • நித்திரையில் நடக்கும் நோயில தமிழரை நாடு கடத்தினார்களாம் மகிந்தர் கூட்டணி.
  • செம்மணியில் மனிசரைப் புதைச்சுப்போட்டு பல்லியையும் பாம்பையும் தான் புதைச்சனாங்கள் எண்டேக்க நம்பின உலகம் தானே! நாசங்கெட்ட உலகம்
  • அந்தாள அதுதான் சிவராம கொண்டு போட்டு அந்தாளுண்ட மண்டைக்குள்ளேயும் கிளறிப்பாத்தாங்களாம் இந்தாள் இதுக்குள்ளேயும் ஏதும் மறைச்சு வைச்சிருக்கோ எண்டு.
  • புத்தனுக்கு எழுதின வரலாறு (மகாவம்சம்) ஒன்று எழுத்திப்போட்டு அதையிப்ப திரும்பவும் தமிழ்ரோட சண்டைய போட்டு புதுப்பிச்சுக்கொண்டெல்லே திரியினம் .
  • கறுப்பு யூலையில சூளை நெருப்புக்குள்ள போட்டு எரிச்சுப்போட்டு சேர்ந்து வாழ் சேர்ந்து வாழ் என்கிறான்களே எப்படி வாழுறது காணும்.
  • வெள்ளை நிற புத்தகோயிலில புத்தரின் இரத்தக்கண்ணீர் இது தான் சிறிங்காவோட நிலமை காணும்.
  • விறகு வெட்டத்தெரிஞ்சா, இளநீர் வெட்டத்தெரிஞ்சா நீங்க தான் ராசா சிறிலங்காவில.
  • ஆய்தம் எல்லாம் வேணாமாம் ' லாடர்' தந்தா காணுமாம்.
  • கீழால கொடுத்தது பத்தாது எண்டுகாணும் மேலால கொடுக்கப்போயினம்.
  • கொழுப்பில இருந்து அனுப்பின தமிழருக்கு புதுசா சத்துணவு திட்டமாமெல்ல கேள்விப்பட்டனீங்களோ?
  • சிங்கள இராணுவம் நிறைய சாகிறதுக்கு என்ன காரணம் தெரியுமே? பைல்லா தான்.
  • இனி நாய் வளர்க்கிற சனங்களெல்லாம் பொடியங்களோட கடுப்பா இருக்கப்போகுது. ஏனென்று சொன்னால் நாயையும் கவனமாய் பேணவேணுமாம். ஆள் சாப்பிடவே சட்டியில சாப்பாடில்ல. நாயெங்க சாப்பிடுறது.
  • இப்பவே உலகம் வெப்பமாகிக்கொண்டெல்லே போகுது காணும். வட துருவத்தில இருக்கிற பனி மலையெல்லாம் உருகிக்கொண்டெல்லே போகுது மகிழ்ச்சி கொள்ளாக் கூடாது கீழ்திசையில இருக்கிற சின்னச்சின்ன தீவெல்லாம் மெல்ல மெல்ல மூழ்கப்போகுது பாருங்கோ. இன்னுமொரு 2050 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகத்தில் பெரிய மாற்றம் வரப்போகுது. நாளைக்கு வரப்போற துன்பத்தைத் தெரியாமல் குதுமங்குத்துகினம் மக்களென்றால் பாருங்கவன்.
  • வறுமையைத் தாங்கலாம் வெறுமையைத் தாங்க முடியாது பாருங்கோ.
  • இப்பதான் சிறுவர் மேல் அக்கறை எடுக்கினம் பாருங்கோ உலகத்தார். அதுவும் கண் துடைப்பு தானோ பார்க்கலாம்.

புதன், 20 ஜூன், 2007

ஊர்களின்பெயர்

யாழ்ப்பாணம் (Jaffna) என்ற நாட்டின் பெயர் இலங்கையில் தமிழர் என்ற நூலில் செய்தித்தொகுப்புகளோடு கூறப்பட்டுள்ளது பக்கம்122 ஐ பார்க்கலாம்.

இஆழ்ப்பானாயந் பட்டினம் - (கி.பி 1435) , யாழ்ப்பாணம் - (கி.பி 1532 ), யாட்பாணம் - ( கி.பி 1603 ) , யாள்ப்பாணம் ( கி.பி 1604 ) , யாப்பாண பட்டனம் (கி.பி 1685 ) , கியல்பான தேசம் ( கி.பி 1715 ) , யாட்பாணதேசம் ( கி.பி 1734 ) ,

யாபா பட்டுன கி.பி 1450 ஆண்டளவில் எழுதப்பட்ட நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள்

  • பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி
  • திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை
  • பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை
  • நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு)
  • சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம்
  • திருநெல்வேலி - திண்ணைவேலி
  • சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை
  • சங்குவேலி
  • ஆல்வாய் - அல்வாய்
  • கருணைவாய் - கரணவாய்
  • பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை
  • புத்தூர்
  • கிளாலி ( பச்சிலைப்பள்ளி )
  • கரம்பன்
  • நாகர்கோயில்
  • பழை
  • தெல்லிப்பழை
  • கொட்டைக்காடு
  • அச்செழு
  • இடைக்காடு
  • வல்லிபுரம்
  • மன்னறத் - மன்னார்
  • யாவகர் சேரி - சாவகச்சேரி
  • கச்சாய்
  • சாவகக்கோடு

ஒல்லாந்து நாட்டு ஊர்களோடு ஒத்த எங்கள் ஊர்கள்.

  • காரைதீவு ( Amsterdam)
  • அனலைத்தீவு ( Rotterdam )
  • வேலணை ( Leyden )
  • நெடுந்தீவு ( Delft )
  • நயினாதீவு ( Haarlem )
  • புங்குடுதீவு ( Midelburg )
  • ஊராத்துறை ( Kayts )
  • ஊராத்துறைக்கோட்டை ( Halmenhiel)
  • காக்கைத்தீவு (Galienye )
  • பாலைதீவு ( Galue )
  • இரணைதீவு ( Twee Gebroeders )

சிங்களப் பெயரோடு ஒட்டும் எம் ஊர்கள்

  • இணுவில் [ ஹினிவில்/ஹினிவில - 'சின்னக்குளம்' 'சின்னவயல் வெளி', 'இனிவில்/இனிவில - பிரித்த வயல்வெளி ]
  • உடுவில் [ உடுவில - ' மேட்டுக்குளம்/மேட்டுவயல்வெளி ]
  • கொக்குவில் [கொக்காவில ( கொக்கா- கொக்கு) ]
  • கோண்டாவில் [ கொண்டவில/கொண்டாவில ]
  • மட்டுவில் [ மட்டிவில ]
  • சுருவில் [ சுருவில]
  • மத்துவில் [ மந்தவில - ' காய்வேளைக்குளம் ' ]
  • நுணாவில்
  • வேராவில் [ வேரவில ( வேர- கத்தரி,மஞ்சள்) ]
  • இத்தாவில் [ இத்தவில் ( இத்த' பூக்கொத்து' ' குலை' ]
  • மிரிசுவில் [ மிரிஸ்வில ( மிரிஸ் - மிளகாய் ) ]
  • வேவில் [ வேவில ( வே- பிரம்பு ) ]
  • கெருடாவில் [ கருடாவில - தேளுள்ளகுளம் ( கருட - தேள்)]
  • நந்தாவில் [ நந்தா -உடுப்பு துவைக்கும் பெண்]
  • நீவில் [ நீவில ( நீ - நீர்) ]
  • மல்வில் [ மல்வில ( மல் - மலர்,வேடர், மலை முதலிய பல பொருள் குறித்த ஒரு சொல்)]
  • முகாவில் [ முகவில ( முக- முதன்மை,விசேஷம்,சிறந்த)]
  • இருவில் [ ஹிருவில ( ஹிரு - எருக்கஞ்செடி)]
  • பண்டாவில் [ பண்டாவில ( பண்டர் - அரசகுமாரன்)]
  • சுளுவில் [ சுளுவில ( சுளு - சிறு) ]
  • தளுவில் [ தல - பனை,தாழ்வு ]
  • கூவில் [ குவில ( கு - அற்ப,சிறிய)]
  • யாவில் [ யாயவில ( யாய - பெருவெளி) ]

செவ்வாய், 19 ஜூன், 2007

தமிழரின் வாழ்வியல் சடங்குகள்

சட்ட+அம்+கு=சடங்கு

வாழ்வியல் சடங்குகளில் தமிழர் பேணவேண்டியவைகளை தொகுத்து தருகிறோம்.

*
*



திருமணம்
*
*
இரு மனம் இணைந்தால் திருமணம் என்பார். சில வேளைகளில் பெற்றோரின் கட்டாயத்தில் இருமனம் இணையாமலே திருமணம் நடந்தேறுகின்றது. ஆனாலும் திருமணம் என்ற சொல் தெய்வத் தன்மையோடு நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற சடங்கு பற்றி ' வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்' என்ற நூலில் அழகாக எடுத்துக்காட்டுகளோடு மு.பெ.சத்தியவேல்முருகனார் எழுதியுள்ளார் அதை தேவை கருதி அப்படியே தருகிறோம்.
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான திருப்பத்தை உண்டு பண்ணுவது. திருமணம் என்கின்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது. திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத்தன்மை என்ற பொருளை உடையது என்று பேராசிரியர் திருக்கோவையாருக்கு உரை செய்யும் போது கூறுகிறார்.
இன்னாருக்கு இன்னார் என்று தெய்வம் ஒரு திட்டம் போட்டு வைத்துள்ளது. அது நமக்குத் தெரிவதில்லை. அதனை இறைவனது மறைத்தல் தொழிலில் ஒன்றாகக்கொள்ளலாம். தெய்வத்தின் இந்தத் திட்டத்தை மீறி எந்தத் திருமணமும் கைகூடுவதில்லை என்பது கண்கூடு.
ஆக, இந்தப் பெண்ணுக்கு இந்த மணமகன் என்று திடீரென்று திருமண உறவு ஏற்படுதில்லை. அதாவது அது திடீரென ஏற்படும் ஒரு வாய்ப்பு அல்ல. எங்கேயோ ஒருவரை ஒருவர் அறியாமல் பிறக்கும் போதே தெய்வத்தின் திட்டம் அரும்பி விடுகிறது. ஆனால் அது நமக்குப் புலப்படுவதில்லை. எப்படியென்றால் ஒரு செடியில் தோன்றுகின்ற அரும்பு அதிகமாக நமக்கு புலப்படுவதில்லை. ஆனால் அந்த அரும்பே வளர்ந்து மொக்குளாகி முறுக்கிதழ் நீங்கி மலரும் போது மணம் வீசி மலரைக் காட்டிக்கொடுக்கிறது. அது போல புலப்படாமல் அரும்பாய் மறைந்து இருந்த தெய்வத்தின் பங்கு மலந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது தெய்வத்தின் மணம் அங்கே கமழ்கிறது.
அதனால் தான் அதனைத் திருமணம் என்று பெயரிட்டனர் பெரியோர். நம்மால் மீற முடியாத தெய்வத்தின் மணம் அங்கே வீசுவதால் அது திருமணம்.
இப்படி ஒரு பெரும் பொருளை வடமொழியில் கூறும் கல்யாணம் என்ற சொல்லில் காணமுடியாது. wedding என்ற ஆங்கிலச் சொல்லில் காணமுடியாது. திருமணம் என்று பெயர் வைத்த தமிழனின் கூர்த்த மதியே மதி.
*
*
தாலி
*
*
தாலி கட்டுதல் தமிழ் வழிவந்த திராவிட குடினருகே உரியது. இது வடவருக்கு உரிய பண்பாடு அல்ல. தாலி பற்றியும், ஏன் தாலி கட்டும் முறையை தமிழர் ஏற்படுத்தினார்கள்? என்பது பற்றியும் பார்ப்போம்.
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ள உரையில் (திரணதூமாக்கினியர்) தொல்காப்பியர் கூறுவதாவது
.
" பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப "
.
அரண் - அரணம் - கரணம்
அரண் ( காப்பு ). ஒ.நோ காப்பரண், முன்னரண், அரண்மனை
அரண் என்பதே கரணம் என்றே திரிந்தது.
.
ஐயா என்போர் பொறுப்பில் உள்ள சான்றோரே அன்றி பூசை செய்யும் பூசாரிகளல்ல.
அதனால் தான் பாரதியும் பாடினார் "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே"
இனி..
.
மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் ஆணும் பெண்ணும் தாங்கள் விரும்புவோரை தெரிவு செய்து கூடி வாழ்ந்தார்கள். கூடி வாழும் போது முன்னையவளை விட ஒருத்தியை மனதுக்கு பிடித்து விட்டால் அவளோடு சென்று விடுவான். தன் முதல் மனைவியை தனக்கு தெரியாது என்றும் வாய் கூசாமல் கூறிவிடுவான். இப்படியே போனால் குமுகம் சீரழிந்து விடுமே என்று தான் பொறுப்புள்ள சான்றோர் தாலி கட்டும் சடங்கை கொண்டு வந்தனர். அதாவது திருமணம் செய்யும் ஆண் தான் மணந்து கொள்ளும் பெண்ணிடம் உறுதி மொழி கொடுக்கவேண்டும். அதை ஓலையில் எழுதி மாழை குழையில் இட்டு மஞ்சள் கயிற்றில் கோர்த்து கட்டவேண்டும். பெண்ணுக்கு பாதுகாப்பானது அவள் கழுத்தே என்று கழுத்தில் ஆணால் கட்டப்பட்டது. அதுவே தான் தாலி எனப்பட்டது.
.
தாலி என்ற சொல் பற்றி ஆராய்வோம்.
தாலம் என்பது பனையையும் அதன் ஓலையையும் குறித்தது. தாலம் - தாலி எனப்பட்டது.
.
தாலி பெண்ணுக்கு மட்டுமல்ல நம் பண்பாட்டுக்கும் வேலி.
.
ஆண் என்ற சொல்லின் வேர் ஆள்( ஆள்பவன் ) என்பதே . பெண் என்ற சொல்லின் வேர் பெள்-விருப்பம் அதாவது பெண் என்பவள் ஆணால் விரும்பப்படுபவள் என்பதே.
.
ஆள்>ஆண்>ஆண்மை>ஆணவம்
பெள்>பெண்>பெண்மை
.
பெண்ணே காப்பாற்றப்பட வேண்டியவள். எந்த ஒரு ஆணும் பெண் தன்னை காப்பாற்றுவதை
விரும்பமாட்டான் என்பதை தொல்காப்பியரும் கூறியிருத்தல் காண்க.
'வினையே ஆடவர்க்கு உயிரே'
.
இதிலிருந்து கூறியவற்றால் இக்காலத்திலோ இனி வருங்காலத்திலோ எந்தப்பெண்ணும் தாலியை ஆடவர் கழுத்தில் கட்டும்படி கூறமாட்டாள். தான் கழுத்தில் கட்டிய தாலியை பேணிக்காக்கக் கூடியவளாக வளர்ந்துகொள்வாள்.

ஞாயிறு, 17 ஜூன், 2007

உலக உலா

*
குடும்பச்சுற்றுலா
*
கிரேக்கம்
*
நாடு - கிரேக்கம்
.
தலைநகரம் - ஏதென்ஸ்அமைவிடம் - ஐரோப்பா
நாணயம் - யூரோ
.
பரப்பளவு - 131,944 km2
.
மக்கள் தொகை - 9,750.000
.
எழுத்தறிவு - 75%
.
மொழி - கிரேக்கம்
.
மதம் - கிரேக்க ஒக்டோடொக்ஸ்
.
வாழ்க்கை - 75 [ அகவை]
*
ஐரோப்பாவில் தென்கிழக்காக அமைந்துள்ளது.ஒரு பெரு நிலப்பரப்பையும் பல தீவுக்கூட்டங்களையும் ஒருங்கே கொண்டு, சுமார் 97 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நாடு. 1830 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. துருக்கியின் ' ஒட்டோமான்' ஆட்சியில் தனது கட்டுப்பாட்டிற்குள் இருந்து இன்று கூட அதன் தடயங்களும் நினைவிடங்களும் உள்ளது. பல தத்துவ மேதைகளையும், அறிஞர்களையும் தந்ததோடு உலகின் நாகரீக வளர்ச்சிக்கும் வித்திட்ட நாடு.சுற்றுலாத் துறையைப் பொறுத்த வரை நூற்றுக்கணக்கான் இடங்கள் உள்ளன. எவ்வேளைகளிலும் உலகின் பல பாகங்களிலும் இருந்து உல்லாசப் பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பர். உலகில் முதன் முதலாக (ஒலிம்பிக்) நடந்த இடம் இந்த கிரேக்கமாகும். 'அக்ரோபொலிஸ்' என்னும் மலைக்கோவில் மற்றும் பல பிரசித்தி பெற்ற அருங்காட்சியகம் போன்ற பல இடங்கள் உள்ளது. இன்று கூட ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனெஸ்கோ' வின் சின்னமாக இந்த 'அக்ரோபொலிஸ்' கட்டிட அமைப்பின் முகப்பு விளங்குகின்ற. மேலும் உலகிலேயே மிக அதிகமாக கப்பல் கட்டும் இடமும், சிறந்த கப்பல் ஓட்டிகள் வாழும் நாடாகும். மிகச் சர்வசாதாரமாக கப்பலை ஓட்டுவதும், சிறிய இடங்களுக்குள் மிக இலாவகமாக அதைத்திருப்புவதும் கொள்ளையழகு. தீவுக்கூட்டங்களிடையே அதிவேக படகுகளில் பயணிக்கும் போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அங்கு கட்டாயம் இருக்கைப்பட்டி அணிந்திருக்க வேண்டும் அந்தளவுக்கு பிரயாணம் அதி வேகமாக இருக்கும். இங்கு சீதோஷ்ண நிலை அண்ணளவாக எட்டு மாதத்திற்கு எங்கள் நாட்டு காலநிலை போன்றே இருக்கும். இங்கு இருக்கும் ' ஒலிவ் எண்ணை ' உலகப்பிரசித்தி பெற்ற தரமான எண்ணையாகும். இங்கு செவ்வரத்தம் பூ, வாழைமரம், மாதுளை மரம் போன்றவற்றை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். உல்லாசப்பிரயாணிகளுக்கு எற்ற நல்லதோர் தெரிவு கிரேக்கம்.
எழுத்து வடிவம் > சிவகுமரேஸ் நோர்வே.

சனி, 16 ஜூன், 2007

தமிழ் அறிஞர்கள்

தமிழிலக்கிய வாழ்வும் வளர்த்தவர்களும்
*
கருவிநூல்கள்< தமிழ் இலக்கிய வரலாறு , வெள்ளிப் பாதசரம்>
*
.
வரதபண்டிதர்
இப்பண்டிதர் சுன்னாகப்பகுதியிலே ஒல்லாந்தர் கால முக்கூற்றில் பிறந்தவர். அரங்கநாதன் என்பவர் இவருக்குத்தந்தை.சதுர்வேதம் ஆயுள்வேதங்களில் மிகுந்த அனுபவசாலியன்றி இலக்கண இலங்கியங்களை மிகவும் பயின்று திறகையுற்ற பாவாணருமாகச் சிவராத்திரிப்புராணம்,ஏகாதசிப்புராணம் என்னும் என்னும் இரு புராணங்களையும் பாடினார். சிவராத்திரிப்புராணத்தில் எழுநூற்றுப் பதினைந்து (715 ) விருத்தங்களும் மேற்குறிப்பிட்ட இரு புராணங்களைவிட அமுதாகரம் என்னும் பெரியமருத்துவ நூலையும் இவர் செய்தனன். அவற்றுள் முந்நூற்றுப்பத்து (310 ) விருத்தங்கள் உள்ளன.
"ஐயமின் முந்நூற்றையிரு விருத்தம்
செய்ய செந்தமிழாற் றெரிந்துரை செய்தனன்
கங்கை மாநதி சூழ் காசி மாநகரும்
பங்கமில் பங்கயப் பைந்துணர் மாலைலையும்
கோதகலோமதிக் கொடியுமிங் குடையோன்
கன்னியங்கமுகிற் கயவினங்குதிக்கும்
துன்னிய வளவயற் சுன்னைநன்னாடன்"
தாமோதரம் பிள்ளை
சி.வை. தாமோதரம் பிள்ளை ( கி.பி 1832 - 1901 ) பல பாட்டுகளையும் உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல்முதலில் பி.ஏ.பட்டம் பெற்றுச் சிறப்பாகத் தேறிய அவர், ஆங்கிலத்தில் பெற்றியருந்த புலமையையும் ஆராய்ச்சியறிவையும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு நல்ல முறையில் பயன்படுத்தினார். அவருடைய பாட்டுகளும் உரைநடையும் பழைய முறையில் சொற்செறிவும் பொருட்செறிவும் உடையன. இன்று அவர் இயற்றிய நூல்கள் மறைக்கப்பட்ட போதிலும், பனையோலையில் இருந்த பழைய தமிழ் ஏடுகள் சிலவற்றைப் பெருமுயற்சியுடன் படித்து முதல்முதலாக அச்சிட்டு வெளியிட்ட அவருடைய அரிய தொண்டு மறுக்கப்படவில்லை. நீதிபதி அளவிற்கு உயர்பதவி பெற்று விளங்கிய அவர், அக்காலத்தில் தமிழ்த் தொண்டைப் பெருமையாகக் கருதினார். உதய தாரகை என்ற தாளிகைக்கும் ( பத்திரைகைக்கும்) ஆசிரியராக இருந்து தொண்டு புரிந்தார். பனையோலை ஏடுகளைப் புறக்கணித்தால் பழைய நூல்கள் அழிந்துவிடுமே என்று பெருங்கவலை கொண்டு முதல் குரல் எழுப்பிப் பல தமிழ் நூல்களைக் காப்பாற்றியவர் அவர். தமிழ் மொழியைத் தாய் என்று வணங்கிப்போற்றும் அளவுக்கு முதல்முதலில் உணர்ச்சி ஊட்டியவர் அவர். " சங்கம் மரீஇய நூல்களுள் சில இப்போதுதானும் கிடைப்பது சமுசயம்... எத்தனையோ திவ்ய மதுர
கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!அயலான் அழியக் காண்கிலும் மனம் தளம்பிகின்றதே! தமிழ்மாது நும் தாய் அல்லவா? இவள் அழிய நமக்கு என் என்றுவாளா இருக்கின்றீர்களா?" என்று எழுதிய சொற்களில் தமிழ் மொழியிடத்திலும் இலக்கியங்களிடத்திலும் அவர் கொண்டிருந்த பத்தி உணர்ச்சி புலனாகிறது. (பரிதிமாற்கலைஞர்) வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் முதலான தமிழறிஞர் பலர் முன்னேற ஊக்கம் ஊட்டியவர் அவர்.
.
இலங்கையர்கோன்
மாணவப் பருவத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர் ' இலங்கையர்கோன்' இயற்பெயர் ந. சிவஞானசுந்தரம். பதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ' மரிய மதலேனா' 1930 களில் ' கலைமகள்' இதழில் வெளியாகிற்று.
சமஸ்கிருதம், லத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஆழ்ந்தபயிற்சி இவரை விரிந்த தளத்தில் சிந்திக்கவும் எழுதவும் வைத்தது. ஷேக்ஸ்பியர் இவரைப் பெரிதும் கவர்ந்தவர். இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்களை மகிழச்செய்தன ' பச்சோந்திகள்' 'லண்டன் கந்தையா', 'விதானையார் வீட்டில்' ' மிஸ்டர் குகதாஸன்' ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன.
ஈழகேசரி,கலைச்செல்வி,ஈழநாடு,தமிழின்பம்,வீரகேசரி,தினகரன் ஆகிய ஈழத்து இதழ்களிலும், கலைமள், சூறாவளி, மணிக்கொடி,பாரதத்தாய், ச்க்தி, சரஸ்வதி, ஆகிய தமிழக இதழ்களிலும் இவரது படைப்புக்க்கள் வெளியாகின.
எல்லாமாக இவர் முப்பது சிறுகதைகள் வரை எழுதியிருப்பார் இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய ' வெள்ளிப்பாதசரம்' என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. பிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் ' முதற்காதல்' மட்டும் வெளிவந்துள்ளது.
' மாதவி மடந்தை' , ' மிஸ்டர் குகதாஸன்' என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன.
இவரது கதைகள் ' கதைக்கோவை' போன்ற திரட்டுகளில் அந்தக் காலத்திலேயே வெளியாகி உள்ளன.
தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்க ளில் ' இலங்கையர் கோன்' முன்னனியில் நின்ற ஒருவர் என்று அப்போதே பாரட்டுப்பெற்றவர். கு.ப.ரா,ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா,வல்லிக்கண்ணன் ஆகியோருடன் எழுதிக்கொண்டிருந்த இவரிடத்தில் கு.ப.ராவின் இலக்கியப்பார்வையும், நடையும் வசப்பட்டிருந்தன. எனினும் நாடக எழுத்தில் பல புதிய சிகரங்களை இவர் தொட்டிருக்கிறார். ஈழத்தமிழர் வாழ்வை மண்மணங்கமழ காவியநயத்துடன் உணர்ச்சி பொங்க சித்தரித்தவர் இவர்.
படைப்புத்துறையி மட்டுமன்றி சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய அழகுக்கலைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தவர் அருங்கலை விநோதர் ' இலங்கையர் கோன்'
சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார்.
காரியாதிகாரியாக பணியாற்றுகிற போது தனது அருமையான பழகு முறையால் சாதாரண மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவரென்று சிறப்பு ' இலங்கையர் கோனு' டைய மானிட நேயத்தை உணர்த்தி நிற்கிறது. இவருடைய படைப்பின் தளமும் எழுத்தின் வசீகரமான வெற்றியும் இதுதான்.
.
கனகசபைப் புலவர்
யாழ்பாணத்துக் கனகசபைப் புலவர் ( 1829 - 1873 ) கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர். விரைந்து கவிதை இயற்றுபவர். திருவாக்குப் புராணம், அழகிரிசாமி மடல் என்னும் நூல்களைப் பழைய மரபை ஒட்டி இயற்றியவர்.
.
வி.கனகசபைப்பிள்ளை
வி.கனகசபைப்பிள்ளை ( 1855 - 1906 ) என்ற அறிஞரும் யாழ்ப்பாணத்துக் குடும்பத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அவர், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், '1800 ஆண்டுகட்குமுன் தமிழர்' என்ற ஆராய்ச்சி நூல் எழுதியும் ஏடுகளை ஆய்ந்தும் தொண்டு செய்தார்.
.
தி.க.கனகசபைப்பிள்ளை
இலங்கை அளித்த வழக்கறிஞர்களுள் தி.க.கனகசபைப்பிள்ளை ( கி.பி. 1863 - 1922 ) என்பவரும் குறிப்பிடத்தக்க இலக்கியத் தொண்டு புரிந்தவர். வடமொழி வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தையும் சுந்தரகாண்டத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணத்தின் பாலகாண்டத்திற்கு உரை எழுதினார்.
.
நா. கதிரைவேற்பிள்ளை
நா.கதிரைவேற்பிள்ளை ( 1844 - 1907 ) மற்றொரு யாழ்ப்பாணப் புலவர். தமிழ்நாட்டில் பல சைவ நூல்களையும் நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். ஒரு நல்ல அகராதியும் தொகுத்தார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார்.
.
கு.கதிரைவேற்பிள்ளை
கு.கதிரைவேற்பிள்ளை ( 1829 - 1904 ) யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்து தொண்டு புரிந்தார்.
.
சிவசம்புப் புலவர்
ஏறக்குறைய அறுபது செய்யுள் நூல்களை இயற்றிய யாழ்ப்பாண அறிஞர் சிவசம்புப் புலவர் ( 1830 - 1909 ) அந்தாதிகள் பல பாடியுள்ளார். எல்லாம் இடைக்காலத் தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றிப் பழைய போக்கில் பாடப்பட்டவை. சில நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.
.
குமாரசாமிப் புலவர்
சுன்னாகம் குமாரசாமிப் புலவர் ( 1854 - 1922 ) வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார்; சாணக்கிய நீதி வெண்பா, மேகதூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை.சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு. சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த நல்ல வரலாற்று நூல். வேறு சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார்.
.
ஆறுமுக நாவலர்
.
யாழ்ப்பாணத்துத் தமிழறிஞருள் சிறப்பிடம் பெற்று வளங்கியவர் ஆறுமுக நாவலர் ( கி.பி. 1822 - 1889 ) . அவர் சிலகாலம் தமிழ்நாட்டுக்கு வந்த சென்னையில் தங்கி தமிழ்த்தொண்டு செய்ததும் உண்டு. சைவ சமயப் பற்று மிகுந்த அவர். பெரிய புராணம் முதலான நூல்கள் பரவுவதற்குப் பெரும் பணி புரிந்தார். சென்று நூற்றாண்டில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்புக்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவர் என்பர். பலர் தமிழ் நூல்கள் படிக்குமாறு படசாலை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டுத் தருவதற்கு அச்சகமும் வைத்து நடத்தினார். அவற்றை நடத்துவதற்கு ஆகும் பணத்திற்கு வீடு வீடுடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத் தமிழ்த்தொண்டு செய்த சான்றோர் அவர். தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் நூல்களை அச்சிட்டுத் தரும் வகையில் சிறந்த வழிகாட்டிய விளங்கினார். மாணவர்களுக்கு உரிய தொடக்கப் பாடப் புத்தகங்களை எளிய தமிழில் இலக்கணப் பிழை அற்ற தமிழில் தாமே எழுதினார்.சைவ சமயத்தை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினார். இலக்கணத்தை எளிதில் கற்பதற்கு உதவும் நூல்களும் எழுதினார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதிப் பலர்க்கும் பயன்படுமாறு செய்தார். வேறு சில செய்யுள் நூல்களுக்கும் நன்னூலுக்கும் உரை எழுதினார். சென்ற ஆண்டில் தமிழில் உரைநடை வளச்சிபெறத் தொடங்கிய சூழ்நிலையில், அதற்கு நல்ல வழிகாட்டிப் பிழையற்ற எளிய உரைநடைத் தமிழை வளர்த்தார். தமிழ் உரைநடையின் தந்தை என்று அவரைக் குறிப்பிட்டுப் போற்றுதல் தகும்.