கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

எழுக தமிழினமே

எழுந்த பனிமலை மடிப்புப் போடவும்
எழுநூறு காதம் நாவலந் தேயவும்
கிழிந்த மண்டக் கீழை நிலத்துள்
எழுந்து நின்றன சிற்சில தீவுகள்
ஐயகோ வன்று அறுந்த புவியிலே
இயற்கைச் சூழலும் எரிதண லாயிற்றே
அவலஞ் சூழ்ந்து அமைதியை வேண்டியே
அலைந்து திரிந்தன அறுதிணை யுயிர்களும்
மிதந்த மரங்களில் ஏறிச் சென்றன
மீண்டும் மீண்டும் பயிற்சி பெற்றன
கைகளைச் சேர்த்தன கருவிக ளாக்கின
கருவிகள் கொண்டு வேட்டைகள் ஆடின
கள்ளை யுண்டன கறியைத் தின்றன
கொள்ளை இன்பத்தில் கூடல் கொண்டன
அஞ்சியும் அழுதன ஐம்பூதம் தொழுதன
விஞ்சிய அறிவிலும் வேள்விகள் செய்தன
இப்படித் தானொரு இனமொன்று தோன்றிற்று
இற்றைக்கு பத்தா யிரத்துக்கு முன்பு
பஃறொளி ஆற்றுடன் பழுத்த பேரினம்
படிப்படியாய் கூர்ப்பும் கூர்மையும் பெற்றது
கீறிப் பழகியே கலைகள் படைத்தது
கீற்றுடன் இணைந்தே பாடவும் கற்றது
ஓலைச் சுவடியில் புலமை யாத்தது
ஒன்றாய் இணைந்து வாழவும் வைத்தது
சாலச் சிறப்பாய் திணைகள் வகுத்தது
சேலையும் வேட்டியும் நெய்து போட்டது
கற்காலம் இரும்புக் கரிக்காலம் பொற்காலங்
கற்றறிந்து கல்வியால் நிலங்களைக் கழனியாக்கி
நெல்லுடைத்துச் சோறுண்ட இனமடா எம்மினம்
சொல்லிக் கொள்ள மொழியும் இருந்தது
செல்வம் கொழிக்கும் வளமும் இருந்தது
அள்ளிக் குடிக்க நீருமி ருந்தது
அவனியில் தமிழர்க்கு நாடு மிருந்தது.
என்ன குறைகள் எங்கள் நிலத்திலே
மன்றமி ருந்தது மாட மிருந்தது
கோயி லிருந்தது கோபுர மிருந்தது
கோலொச்சி மன்னர் மாளிகை யிருந்தது
மும்முடி வேந்தர் மண்டலம் போலவும்
நம்மீழ மண்டலம் நம்மோ டிருந்தது.

அப்பால் நிலத்தி லிருந்து வந்தார்
ஆரியர் அவரை யன்புடன் ஏற்றார்
முப்பால் வள்ளுவன் காலத்து முன்பால்
முத்தமி ழேற்றியும் போற்றியும் வைத்தார்
சித்தர் போலவே சித்தம் பெற்றார்
சினந்து தமிழரை இழிந்த்து வைத்தார்
நரிகளாய் மாறி நற்றமி ழழிக்க
பரிகளாய்த் தமிழரைப் பயன்படுத்தி ,னாரே
இருந்த நிலத்தில் பாதியும் போயிற்று
இந்திய மென்றே மாறியும் போயிற்று
எஞ்சிய நிலங்களில் எங்கள் தமிழினம்
வஞ்சமின்றி பஞ்சமின்றி வாழ்ந்தேதான் வந்தது
வணிகம் செய்ய் வந்த பறங்கிகள்
பணிய வைத்தே பறித்துக் கொண்டனர்
வரிகள் போட்டனர் அடிமை யாக்கினர்
உரிக்கும் வரையெமை உரித்தே விட்டனர்
பொன்னும் பெண்ணும் யானையும் பனையும்
என்னென் .னவோவனைத் தையுமேற் றினர்பார்
எஞ்சிக் கிடந்த நிலத்தை விடவே
எங்களர் உரித்தை சிங்களர் எடுத்தனர்
இருபதி .னாயிரத்து முந்நூற் றெண்பது
அருந்தமிழ் நிலத்தையும் இருபங்கு கடலையும்
நேருசே .னனாயக்கா கூட்டுச் சதிகள்
நீறா யாக்கு மென்றஞ்சித் தந்தையர்
நீரா நோன்புகள் நித்தம் செய்தார்
காடைய ரேவிக் கட்டையால் பொல்லால்
காடேறி யரசு கொலையும் செய்தது
பொறுமை இழந்து போரில் குதித்து
போரை மூட்டினர் முப்பதாண் டுகளாய்
இறைமைப் போரில் எழுப தாண்டுகள்
இடரைத் தாங்கிய தமிழீழப் போராட்டம்
இந்தியச் சூழ்ச்சியால் வல்லர சாட்சியால்
குந்தகம் செய்தழித் தனவே யறிவோம்

முன்னே யுளது யிந்திய மாக
பின்னே யுளது சிங்கள மாக
இடையே யுள்ள ஈழத் தாயமே
படைகள் நடந்த தமிழீழம் கண்டோம்
பாய்ந்து திரிந்த எங்கள் நிலத்தை
மொய்யா யெழுத நீவீர் யாரோ
மீண்டும் தமிழர் ஆழுங் காலம்
மிடுக்காய் வருமென்றல் திண்ணம் திண்ணம்
எமக்கே யுரிய சொந்த நிலமதில்
எவனுக்கும் சொந்த மல்லவே வெளியேறும்
நலமாய் வாழ நமக்கொரு நாடு
பொல்லார்ச் சிங்களப் படைஞரே வெளியேறும்
கைகள் கால்கள் கண்களி ழந்தோமன்றி
வையம் தன்னில் வேங்கை கொண்ட
வேட்கை மட்டுமே மேனுமி ழக்கோம்
விடுதலை வரும்நாள் விரைவி லுண்டு
உலகத் தமிழரே யொன்று படுவீர்
ஈழம் மலரு மென்றே கூவுவீர்
புறத்தே நின்று தட்டிய கைகளே
உறைந்து போனீரோ வீழ்ச்சி கண்டு
போர்க்களம் நின்ற புலிகள வர்களை
மறவர் என்றே பரணீ யாத்தோரே
உலாப் பாடி வெற்றிக்கு வாகைசூடி
விழாவெடுத் தோரே புலவோரே நிம்தூவல்
இன்னல் கண்டும் எழுந்து பாடட்டும்
செத்தவீட் டுக்குபின் செலவு கழித்து
திதியொன் றாவதற்குள் திக்கெட்டும் கலைந்தீர்
சொந்தங் களில்லாது சோகத்தில் வாட
வெந்த புண்ணிற் வேல்பாச் சாதீர்
வந்துநீர் வாரும்நம் குழந்தைகள் நலமாக
பந்தமாய்த் தாங்கி நாளையும் வேளையும்
தாங்குமிந்த தாயுமா .னவள்போல்
தாங்கி வாழ்வோம் நம்நிலம் நாமே!

கருத்துகள் இல்லை: