கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

பழஞ்சோறு


பழைய சாதம்!!

**************

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (Pரொபிஒடிc பcடெரிஅ) (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

**
பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!
நன்றி.
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

விழித்துக்கொள்வோம்



இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை பற்றி சில உண்மைகள்..!

உலகில் உள்ள விவசாய நிலங்களில் மிகவும் அற்புதமான சில பண்புகள் கொண்ட நிலங்கள் இவை. ஒரு ஆண்டில் எல்லா காலநிலையிலும் விவசாயம் செய்யக்கூடிய மண் நம் தாய்மண். இது ஒருநாளில் ஒருவரின் உழைப்பால் இப்படி மாறியது கிடையாது...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் பாட்டன் பூட்டன் என அனைவரும் அரும்பாடுபட்டு நமக்காக சேர்த்து வைத்த சொத்து. இந்த மண் இவ்வளவு செழிப்பாக இருப்பதற்கு காரணம் அவர்களின் உழைப்பு. அள்ள அள்ள குறையாத அமுத கலசம். நீர்வளம்மும் அப்படிதான் என் நினைவு தெரிந்து கிணற்றில் கைகளால் தண்ணீர் அள்ளியது உண்டு.

ஆனால், இன்று இவை அனைத்தையுமே தொலைத்து கொண்டிருக்கிறோம். இன்று கிணறுகளை பார்ப்பதே அபூர்வமாக உள்ளது. இது போன்ற நிலங்கள் உலகில் அபூர்வமானவை. இந்த மண்ணின் வளத்தை பார்த்து இந்த மண் நம் நாட்டில் நம்மிடம் இல்லையே என ஏங்காதா வெளிநாட்டு விவசாயிகளே இல்லை. வாய்ப்புகள் கிடைத்தால் நீங்களே அவர்களிடம் விசாரித்து பாருங்கள் தெரியும்.

நம்மிடம் இருப்பதினாலோ என்னவோ அதன் மதிப்பு நமக்கு தெரியவில்லை. விலைமதிப்பில்ல நம் சொத்தை விலைநிலங்களாக மாற்றிவருகிறோம்.

விழித்துக்கொள்வோம் தமிழா..!
இது நம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சி..!
நம் வாழ்வாதாரத்தை அழித்து நம்மை பிறரிடம் கையேந்த வைக்க நடக்கும் சூழ்ச்சி..!
விழித்துக்கொள்வோம்..!

உலகில் மூத்தகுடியான தமிழர் இன சந்ததிகள் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டுசெல்லாதீர்கள்..!
நன்றி.
- துரை.அதிரதன்.



சனி, 9 பிப்ரவரி, 2013

பண்பாட்டுப் பொருள்கள்



அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் :

#அரிக்கன் விளக்கு

காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

#அம்மி

குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

#அண்டா

அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

#அடுக்குப்பானை

ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

#அடிகுழாய்

கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

#ஆட்டுக்கல்

வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

#அங்குஸ்தான்

தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

#ஓட்டியாணம்

பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

#எந்திரம்

(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

#உரல்

வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

#உரி

(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

#குஞ்சம் - குஞ்சலம்

(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

#கூஜா

(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

#கோகர்ணம்

(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

#கொடியடுப்பு

ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

#சுளகு

வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.


#தாவணி

(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

#தொடி

பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

#நடைவண்டி

(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

#பஞ்சமுக வாத்தியம்

கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

#பாக்குவெட்டி

(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

#பிரிமணை

(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

#புல்லாக்கு

மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

#முறம்

(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

#லோட்டா

நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

#மரப்பாச்சி

பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.
நன்றி.
தமிழன் என்கிற 
திமிரு எனக்கும் உண்டு

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நெல்லிக்காய்



இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய்.

* நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

* நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.


* நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

* நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

* உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

* நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.
நன்றி.
பசுமைப் புரட்சி 

அரிசி


ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டு. அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!

நன்றி
பசுமைப் புரட்சி