கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 28 மார்ச், 2015

சிங்கப்பூர்


லீ குவான் யூ.....

இணையம் முழுவதும் இவருடைய மரண செய்தியை பார்த்தேன்.உண்மையில் எனக்கு இவர் யாரென்று தெரியவில்லை.இவர் சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்தவர் என்றும் முன்னாள் பிரதமர் என்ற செய்தியும் தான் தெரிந்தது.இணையம் சென்று இவரைபற்றி தெரிந்துக்கொண்ட போது ’இருந்தாலும் மறைந்தாலும் இவர் பேர் சொல்ல வேண்டும்.இவர் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்த சிங்கப்பூரின் தந்தை இவர்.ஒருமுறை பிரிட்டீஷ் குழு அறிக்கையில் உலகின் மிக மோசமான சேரிகளை கொண்ட இடம் சிங்கப்பூர் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டை நாகரீக சமுதாயத்தின் ஒரு அவமானம் என்றும் கேலி பேசியது....இதனை கேட்டு வெகுண்ட லீ அவர்கள் 1960 ல் பிரதமர் ஆனவுடன் வீட்டமைப்பு வளர்ச்சி கழகத்தை துவங்கி ஐந்தே ஆண்டுகளில் 54 ஆயிரம் குடியிருப்புகளை உருவாக்கினார்..

அனைவருக்கும் வீடு என்பதே அவரது லட்சியமாக இருந்தது.அவரது இந்த லட்சியத்தினால்தான் இன்று சிங்கப்பூரில் 82 சதவீத மக்கள் சொந்த வீட்டிலும்,அவர் உருவாக்கிய வீட்டமைப்பு வளர்ச்சி கழக வீடுகளிலும் வசிக்கின்றனர்.அது மட்டுமல்ல குட்டி நாடாக இருந்தாலும், பொருளாதார வல்லரசாக மாற்றியவர் லீ. அதோடு பலமிக்க ராணுவத்தை கொண்டதாக சிங்கப்பூர் மாறியதற்குக் காரணம் இதற்கு லீயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஆகும்.கடந்த 1963ஆம் ஆண்டு, சிங்கப்பூரை இந்தோனேஷியா படை தாக்கியது. அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிங்கப்பூர் தவித்தது.இந்த தாக்குதலுக்கு பின்னர், பலமான ராணுவத்தை உருவாக்க நினைத்தார் லீ. உடனடியாக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டாய ராணுவ சேவை அறிமுகமானது. இதனால், சிங்கப்பூர் ராணுவம் பலம் கொண்டதாக மாறியது..

ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
சுத்தத்தை அதிகம் விரும்பியவர். அவர் பிரதமராக பதவி வகித்த காலங்களில், ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து, சிங்கப்பூர் நகரத்தின் தெருக்களை கூட்டி சுத்தம் செய்தார். இதற்கு பின்னரே, சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணரத் துவங்கினர். இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதன் பின்னணி இதுதான்.......

31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக வாழ்ந்தவர் லீ குவான் யூ.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதன் 50வது ஆண்டு பொன்விழா தற்போது வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என லீ, தனது நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக லீ மரணமடைந்துள்ளதால், சிங்கப்பூர்வாசிகள் தற்போது லீ.,க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லீ.,யின் மரணத்தை அடுத்து ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்க உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளதால் சிங்கப்பூரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது......

மாபெரும் சபை தனில் நீநடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் .
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்.......

- Panimalar Vaithi

கருத்துகள் இல்லை: