கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

மீனாட்சி அம்மன்


மீனாட்சி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்

கோயில் அமைப்பு 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் 8 கோபுரங்களையும், 2 விமானங்களையும் கொண்டுள்ளது. இத்திருக் கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடி யும் உடையது. மேலும் ஒரு ஏக்கர் பரப் பளவில் கோயில் வளாகத்தில் பொற்றாமரைக்குளமும் அமையப்பெற்றுள்ளது. கோபுரங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது.

மேலும் கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது. கருவறை விமானம் இக்கோயிலின் கருவறை விமானமானது, இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிம்ம உருவங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. பொற்றாமரைக்குளம் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பொற்றாமரைக்குளம் செவ்வக வடிவில்,165 க்ஷ் 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது.

பொன் + தாமரை + குளம் என பொருள்படும் வகையில் பொற்றாமரைக்குளம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இதன் வடக்கு கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அதோடு தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.

பல நூறு வருடங்களுக்கு முன் இந்த பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது
கவின் கொஞ்சும் மண்டபங்கள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண் டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கவின் கொஞ்சும் மண்டபங்கள் கோயிலில் அமைந்துள்ளன. அதோடு கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபத்தில் தற்போது சிறு வணிகக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் உள்ளது. இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் 985 தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் அழகுடனும், மிளிர்ச்சியுடனும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது
ஆயிரங்கால் மண்டபம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேராக இருப்பது போன்ற தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் 985 தூண்கள் அமைந்துள்ளன.

நடராஜர் சிலை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமான், சொக்க நாதர் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். மற்ற எல்லா சிவத்தலங்களிலும் இடது காலை தூக்கி தாண்டவமாடும் கோலத் தில் இருக்கும் நடராஜர் சிலை இங்கு வலதுகாலை தூக்கி ஆடும் தோற்றத்தில் காணப்படுகிறது. மீனாட்சி அம்மன் விக்ரகம் கருவறையில் மீனாட்சி அம்மன் இரண்டு திருக் கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார்.


இந்த விக்ரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார். மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களிலும் அம்மன் அழைக்கப்படுகிறார்.விஷ்ணு நடத்திவைத்த திருமணம்! விஷ்ணு பகவான் தன் தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு மணமுடித்து வைக்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. —  Raj Kumar

கருத்துகள் இல்லை: