கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 2 மே, 2009

தமிழெழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?

ஆரியச் சூழ்சியால் அடிமைப்பட்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் அல்மந்துழலும், அருமொழித்தமிழரை விடுவித்து முன்னேற்ற முயன்ற முனைவர் மூவருள் இறுதியரான, பெரியாரின் நூற்றாண்டு விழாவென்று விளம்பிய மட்டில் , ஏற்கனவே இருந்த இடம் தெரியாமல் இருந்தவரும் , பெரியாரோடு ஒருமுறையேனும் பேசியறியாதவரும், தன்மான வுணர்வும் தமிழ்ப் புலமையும் தக்கவாறில்லாதவரும், தன்மானப்போர்ப் படைத்தலைவர் போன்றும், தன்னேரில்லாத் தமிழதிகாரி போன்றும், நடித்துக்கொண்டு, தமிழ் உலகப் பொதுமொழியாகவும் தமிழின் ஒன்றிய நாட்டினங்களின் தலைவனாகவும் ஒரே வழி `விடுதலை` யெழுத்தை மேற்கொள்வதே என்று மேடைகளிற் பிதற்றியும், ஓரளவு அதிகாரம் பெற்றுக் குழுக்கள் அமைத்துக் கூட்டங்கள் கூட்டியும், தமிழ்ப் பகைவரும் தமிழறியாத பெருமாளரும் கர்ருக்குட்டிகளுமான தகுதியல்லா மக்களின் கருத்தைத் துணைகொண்டும், தம்வயப்பட்ட ஏடுகளிலெல்லாம் தமிழெழுத்தை மாற்றி, உலகில் இதுவரை எவரும் நிலைநாட்டாத தொன்றை நிலைநாட்டி விட்டதாகக் கொட்டமடித்து திரிவாராயினர்.

அரசகோபாலாச்சாரியார் 1937 - ல் தமிழ்நாட்டில் கட்டாய இந்திக் கல்வியைப் புகுத்தியலிருந்து, நான் இந்தியெதிர்ப்புப்பற்றிப் பெரியாருடன் தொடர்புகொண்டு இறுதிவரை நெருங்கிப்பழகினேன். அக் காலமெல்லாம், தமிழர் `விடுதலை` யெழுத்தை மேற்கொள்ள வேண்டுமென்று பெரியார் ஒரு கூட்டத்திலேனுஞ் சொன்னதுமில்லை; ஓர் இதலேனும் எழுதினதுமில்லை. எனக்கு முன்பே பெரியாரை யடுத்து அவர் தன்மானக் கொள்கையைக் கடைப்பிடித்து அவருக்கு வலக்கைபோல் துணையாயிருந்தவர் பர். (Dr) கி.ஆ.பெ. விசுவநாதம் என்னும் உலக நம்பியாரும், இதற்குச் சான்று பகர்வர்.

நான் திருச்சிராப்பள்ளியிற் பணியாற்றிய காலத்தில், 1938ஆம் ஆண்டில் பெரியார் ஈரோட்டிலிருந்து எனக் கெழுதியிருந்த 5பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே எழுதப்பட்டிருந்தது. நான் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவனாயிருந்த காலத்தில், 1974ஆம் ஆண்டில்,பேரா.தி.வை சொக்கப்பனாரும், பேரா. பெரியசாகியும் எனக்குச் சிறப்புச் செய்ய ஏற்படுத்தியிருந்த கூட்டத்திற்குத் தலைமை தங்கிய பெரியார், தம் கையினால் எனக்கு வழங்கிய வெள்ளிப் பட்டயத்திற் பொறிக்கப்பட்டுள்ள பாராட்டு வாசகம் மரபெழுத்திலேயே உள்ளது.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலை நீங்கிக் காட்டுப்பாடி விரிவிலிருந்த போது, நான் வருமானமின்றி யிருந்த நிலைமைலறிந்து பெரியார் தாமே என் உறையுள் தேடிவந்து இருநூறு உருபா வழங்கினார். அன்றும், தமிழெழுத்து மாற்றம்பற்றி என்னிடம் ஒன்றும் சொன்னதில்லை. பெரியாருக்கு என்றும் தன்மான இயக்கத்திலன்றித் தமிழ் வளர்ச்சியில் ஈடுபாடு இருந்ததே யில்லை. நூன், ஒருகால், அரைக்கால், உருபாம் காசில் இந்தியெழுத்தும் தெலுங்கெழுத்தும் இருந்தபோது தமிழெழுத் தில்லாமை பற்றிக் கிளர்ச்சி செய்யவேண்டுமென்று பெரியாருக் கெழுதினபோது, அவர், ” நான் உங்களைப் போற் பண்டிதனல்லேன். பொதுமக்களிடம் தொண்டு செய்து அவர் மூடப் பழக்கவழக்கங்களைப் போக்குபவன், நீங்களும் உங்களைப்போன்ற பண்டிதருமே சேர்ந்து அக்கிளரச்சி செய்யுங்கள்”
என்று மறுமொழி விடுத்துவிட்டார். இதிலிருந்து, தமிழ்மொழியோ எழுத்தோ பற்றி அவருக்குக் கடுகளவும் கவலையிருந்ததில்லை யென்பது வெட்டவெளிச்சமாகிறது. அவர் இந்தியை யெதிர்ததெல்லாம், பேராயக் கட்சியை யெதிர்ப்பதும் ஆரியச் சூழ்ச்சியைக் கண்டிப்பதும் தமிழ திராவிடர் நல்வாழ்விற்கு வழிவகுப்பதும் குறிக்கோளாகக் கொண்டதே யன்றி வேறன்று. இதை அவர் பல பொதுக்கூட்டங்களிலும் வெளியிட்டுச் சொல்லியிருக்கின்றார். விடுதலை|, குடியரசு| ஆகிய இதழ்களில் சில எழுத்து வடிவங்களை அவர் மாற்றியது, முற்றும் சிக்கனம் பற்றியதே, பெரியார் சிக்கன வாழ்வு நாடறிந்ததுÉ உலகறிந்தது.

தமிழெழுத்து மாற்றம் என்பது தேவையில்லாத ஒரு சிறு செயல். பெரியார் செயற்கரிய பெருஞ்செயல்களைச் செய்தவர். அவர்மீது ஒரு சிறு புன்செயலையேற்றுவது. ஆவர் பெயருக்கு இழுக்கே யாகும்.



நூல் : பாவாணர் நோக்கில் பெருமக்கள் ( 1980)

கருத்துகள் இல்லை: