கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 7 மார்ச், 2009

கேள்விச்செல்வம்

கேள்வி: செ.பாண்டியன், கோவை - ௨ (2).

தமிழ் ஒலிக் குறியீடுகளில் தேவைப்படுங்கால் வடமொழியெழுத்துகளான ஜ்,ஹ்,ஸ்,ஷ் முதலியவற்றையும்; ஆங்கில எழுத்துகளான J,F,H,G முதலியவற்றையும்,எழுதிக்காட்ட என்ன முறையைக் கையாள வேண்டும்? நம் எழுத் தமைப்பில் ஏதாவது
மாற்றம் செய்து கொள்ளலாமா? அவ்வாறாயின்,அம் முறையைத் தென்மொழியில் எழுதுவீர்களா?

பதில்: ஞா . தேவநேயப் பாவாணர்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் ஒலித்தொகுதியுண்டு.எல்லா மொழிகட்கும் பொதுவான ஒலிகள் ஏறத்தாழ இருபத்தைந்தே. பெருமொழிகளுள் மிகக்குறைந்த ஒலிகளுள்ளவை தமிழும், மிக நிறைந்த ஒலிகளுள்ளது வடமொழியுமாகும்.தமிழின் அடிப்படை யொலிகள் முப்பது. வடமொழி யொலிகள் நாற்பதெட்டு முதல் ஐம்பத்து மூன்றுவரை பலவாறு சொல்லப்பெறும்.
ஒவ்வொரு பெருமொழிக்கும் சில சிறப்பொலிகளுள. மொழிகளெல்லாம் வல்லியல்,மெல்லியல் என இருதிறப்படும். அவற்றுள், வல்லியன் மொழிகள் ஏனைமொழிச் சிறப்பொலிகளுட் பெரும்பாலானவற்றை ஏற்கும் திறத்தன. மெல்லியன் மொழியோ அத் திறத்ததன்று. தமிழ், மெல்லியன்மொழிகளுள் தலை சிறந்தது. ஆதலால், பிறமொழி வல்லொலிகளை ஏற்காது. மெல்லொலியுடன் வல்லொலியை இணைப்பது. மெல்லிய மல்லாடையுடன் வல்லிய கம்பளியை இணைப்பது போன்றதே. ஆடவர் பெண்டிர் மேனிகள்போல், வல்லியன் மொழிகளும் மெல்லியன் மொழிகளும் என்றும் வேறுபட்டேயிருக்கும். தமிழில் வல்லொலிகள் கலப்பின் அதன் தன்மை முற்றும் மாறிவிடும்.அதன்பின் அது தமிழாகாது.
தமிழின் மென்மையை யுணர்ந்தே, கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர் தமிழ்ச் செய்யுட்கு வடசொல்லை வேண்டாது வகுத்த விடத்தும்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்று வடவெழுத்தை விலக்குவாராயினர். இனி, 12 ஆம் நூற்றாண்டில்,

"இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும்
அல்லா அச்சை வருக்க முதலீறு
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம்
பொதுவெழுத் தொழிந்த நாலேழும் திரியும்"

என்று வட சொற்கள் பெருவாரியாய்த் தமிழில் வந்து வழங்குவதற்கு வழி வகுத்த பவணந்தியாரும்.

"ஏழாமுயி ரிய்யும் இருவும்ஐ வருக்கத்து
இடையில் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வும் முப்பது சயவும்
மேலொன்று சடவும் இரண்டு சதவும்
மூன்றே யகவும் ஐந்திரு கவ்வும்
ஆவீ றையும் ஈயீ றிகரமும்"

"ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்கு
இய்யும் மொழிமுத லாகிமுன் வருமே"

"இணைந்தியல் காலை யரலக் கிரகமும்
மவ்வக் குகரமும் நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி உவ்வும் ஆம்பிற."

எனத் தமிழியற் கொத்தவாறே வடவொலிகளைத் திரிக்க உடன்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டில் தக்க புலவரும், இன்மையால்,தமிழ் உரைநடையிலும் செய்யுளிலும் வடசொற்களுடன் வடனெழுத்துகளும் தாராளமாய் வந்து கலந்துவிட்டன. அவர்ரையெல்லாம் நிறை தமிழ் வாணரான மறைமலையடிகள் களைந்தெறிந்தார்.

ஒரு தமிழ்ப் பேரறிஞர் ஆய்த வெழுத்தினியல்பைப் பிறழவுணர்ந்து,அதனைக்கொண்டு ஆரிய வொலிகலையெல்லாம் தமிழிற் குறிக்க வொண்ணுமென்றும், அதற்காகவே அது தமிழ் நெடுங்கணக்கில் வகுக்கப்பட்டதென்றும் கருதினார். அஃதாயின் தமிழ் ஒரு வல்லியன் மொழியாயும் அதன் நெடுங்கணக்கு ஆரிய மொழிகளெல்லாம் தோன்றியபின் ஏற்பட்டதாயுமிருத்தல் வேண்டும். தமிழின் தொன்மையும் முன்மையும் மென்மையும் அக் கொள்கைக்கு முற்றும் மாறாயுள்ளமை காண்க.

ஆய்தம் என்பது ஒரு வகை நுண்ணியககரவொலியே யன்றி வேறன்று.
ஆய்தல் - நுண்ணியதாதல்.
" ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் "

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.

ஆய்த வொலியைப் பிறழ வுணர்ந்தும்,ஒலி வடிவிற்கும் வரிவடிவிற்கும் இயைபின்மையை அறியாதும்,ஆய்த வரிவடிவைத் துணகொண்டு F,Z,போன்ற ஆங்கில வொலிகளைச் சிலர் தமிழிற் குறித்து வருகின்றனர். எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரியன்று. தமிழ் வரிவடிவால் ஓர் அயலொலியை இடர்பட்டுக் குறிக்க முயல்வதினும், அவ் வொலிக்குரிய அயன்மொழி வரிவடிவையே தழுவுவது நன்றாயிருக்குமே! ஓர் ஒலியைத் தழுவும்போது ஏன் அதன் வரியைத் தழுவுதல் கூடாது? ஆங்கிலம் உலக மொழிகளெல்லாவற்றினின்றும் சொற்களைக் கடன் கொண்டிருந்தும் அவற்றையெல்லாம் தன்னொலியாலும் தன் வரியாலுமன்றோ இன்றும் குறித்துவருகின்றது.

மொழியென்பது ஒலித்தொகுதியேயன்றி வரித்தொகுதியன்று. வரி மாறலாம், ஒலி மாறாது. ஒலி மாறின் மொழி மாறிவிடும். செவிப்புலனாய வொலியைக் கட்புலனாக்குங் குறியே வரியாம்.

முதலில் வடசொற்களையும் பின்பு வட வெழுத்துகளையும் ஒவ்வொன்றாகப் புகுத்துவதையே, கொடுந்தமிழ் மொழிகளை ஆரிய வண்ணமான திரவிடமாக்கும் வழியாக, தொன்றுதொட்டு வட மொழியாளர் கையாண்டு வந்திருகின்றனர். சேர நாட்டுச் செந்தமிழ் சோழ பாண்டி நாட்டொடு தொடர்பற்றுக் கொடுந் தமிழாகிப் பின்பு, ஆரியச் சேர்க்கையால் மலையாளம் அல்லது கேரளம் என்னும் திரவிட மொழியாகத் திரிந்துள்ளமை காண்க. கொடுந்தமிழ்களை முன்னர் ஆரிய வண்ணமாக்கியது போன்றே, இன்று செந்தமிழையும் ஆக்க முயன்று வருகின்றனர். அதனொடு ஆங்கில எழுத்துகளும் சொற்களும் சேரின், தமிழ் விரைந்து அழிந்து போவது திண்ணம். அரசன், நகைச்சுவை, பொத்தகம் அல்லது சுவடி, பூ, பறவை என்னும் தென் சொற்களிருக்க, அவற்றிற்கு மாறாக ஏன் ராஜன், ஹாஸ்ய ரசம், புஸ்தகம், புஷ்பம், பக்ஷி என்னும் வட சொற்களையும் வட சொல் வடிவங்களையும் தழுவ வேண்டும்?

இயற்கை யொலிகளும் செயற்கை யொலிகளும் மிகுந்து நெடுங்கணக்கு நீண்ட வடமொழியுள்ளும், எ, ஒ என்ற உயிர்க் குறில்களும், ள, ழ, ற அன் என்னும் மெய்யெழுத்துகளும் ஆகிய தமிழொலிகளும், F, Z என்னும் ஆங்கிலவொலிகளும், சில அரபியொலிகளுமில்லை. ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பொலிகளுள. அவற்றையெல்லாம் தழுவுவது ஆங்கிலமாகிய உலக மொழி ஒன்றற்கே தகும். எல்லா மொழிகளும் தழுவ வேண்டியதில்லை; தழுவின், எல்லாம் தத்தம் தனித் தன்மையிழந்து ஒன்றாகிவிடும்.

ஒரு மொழியின் வளம் அல்லது வலிமை அதன் சொற்களாலாயது. பொருள்தரும் சொல்லிற்கு உறுப்பாகும் ஒலியே எழுத்தாம். அது தன்னளவிற் பொருள் தராது. அதனாலாகும் சொல்லே பொருள் தருவது. குமரிக் கண்டத் தமிழர், முப்பதொலிகளைக் கொண்டே, அக் காலத்து மாந்தருள்ளத்திலெழுந்த கருத்துகளைக் குறிக்குஞ் சொற்களையும், பிற்காலத்திலெழுங் கருத்துகளை குறித்தற்கேற்ற சொற்கருவிகளையும்,அமைத்துச் சென்றனர். ஆதலால், ஒலிக் குறைவினால் தமிழிற்கு ஏதும் மொழிக்குறைவில்லை. ஆயிரங் காய்ச்சியான தென்னைக்கு ஓலைக் குறைவுமில்லை அழகிய சொல்வளமிக்க தமிழுக்கு ஒலிக் குறைவினால் ஒரு குறைவுமில்லை.ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் நின்றே வளர்தல் வேண்டும். ஆதலால், தமிழுக்கு எவ்வகையிலும் எழுத்து மாற்றம் தேவையின்றென அறைக. அது தமிழுக்கு இறுதி விளைக்குமென்றே மறைமலையடிகளும் விடுத்தனர். அதுவே உறுதியென்று கடைப்பிடிக்க.



நூல் : தமிழ்வளம் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர்

கருத்துகள் இல்லை: