கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 29 மார்ச், 2008

ஆறுமுகநாவலரருளிய வினா-விடை


பதிப்புச் செம்மல் ஆறுமுகநாவலரைப் பணிந்து.

1.இலக்கண நூலாவதியாது ?

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.

2.அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும் ?

அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தெடர்மொழியதிகாரம் என, மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும்.

3.எழுத்தாவது யாது ?

எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்.

4.அவ்வெழுத்து எத்தனை வகைப்படும் ?

அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

5.உயிரெழுத்துக்கள் எவை ?

உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என பன்னிரண்டெழுத்துகளுமாம். இவை ஆவியெனவும் பெயர் பெறும்.

6.உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

உயிரெழுத்துக்கள் குற்றெழுத்து, நெட்டெழுத்து என இரண்டு வகைப்படும்.

கருத்துகள் இல்லை: