பக்கங்கள்

வியாழன், 21 பிப்ரவரி, 2013

நான்




நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் ....!

சுயநலமற்ற தந்தைக்கு 

மகனென்பதாலும்,
வீரப்பரம்பரையின்
விழுதென்பதாலும்
அவசர அவசரமாக
அழிக்கப்பட்டிருக்கிறது உன் தடம்...

தனியே பள்ளி செல்லத் தவிக்கும்
தமிழ்ப்பிள்ளைகளுக்கு நடுவில்,
பகைவனிடம் செல்லுகையில் கூட
பயப்படவில்லை நீ...
அது சரி....,
தப்பாமல் பிறந்த
தமிழ்மகனல்லவா...


ஏதுமறியா அப்பாவியாய்
இறுதிக்கணத்தில் இருந்திருக்கிறாய்
என்பதை
ஏங்கித் தவிக்கும் உன் விழிகள்
எமக்குத் தெரியப்படுத்துகின்றன..

வரவேற்று உணவளித்து
வாழ்த்தியனுப்புவது
தமிழன் பரம்பரை .
உணவளித்த பின்
உயிரை எடுப்பது
சிங்களவன் வரைமுறை

ஆயுதபூசைகளுக்கு நடுவில்
அவலக்குரல் எழுப்பியிருப்பாய் நீ ..
இப்போது தான்
உலகக் கடவுள்களில்
ஓரிருவர் கண்கள்
நீர்த்து நிறைகின்றன...!

கத்தி ஏந்தியவன்
கத்தியால் குத்தப்படுவான் என்ற
கோமணக் காந்தியின்
குருட்டு வாசகம்
உன்னில் பொய்த்து
உருக்குலைகிறது ..

பிறந்ததிலிருந்து
இறந்ததுவரைக்கும்
எறும்பைக்கூட மிதித்திருக்கமாட்டாய்...
உன்மீது அதற்கான பரிசு
ஒன்பது துளைகளாய் ...!


தலைவன் மகன் என்றால்
அர்த்தம் வேறாயிற்றே..?!!!
அரண்மனை வாழ்க்கை,
அரசவைப் பல்லக்கு,
முன்னேயும் பின்னேயும்
முப்படை.....,
பாடங்களில் இப்படித்தானே
படித்திருக்கிறோம்...


எந்த அடையாளங்களும் இன்றிய
உந்தனின் உடல் - உலகில்
´´முந்தியிருக்கச் செய்கிறது´´
உந்தன் பரம்பரை எளிமையை...

உந்தனின் தியாகத்திற்கு
உண்மை விளக்கம் சொல்ல
எவராலும் முடியாதிருக்கிறது...

ஆனால்;
உனது சாவை
உலகம் முழுவதும்
காட்சிப்பொருள் ஆக்கவே நினைக்கிறேன்
இப்பொழுதும்....


''படம்'' காட்ட மட்டுமே
பழகியிருக்கும் என்னை
´´போராடு´´ என்று சொல்கிறது
உன் சாவு...

ஆனாலும்;
நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் ...
எப்பொழுதும் செவிடனாய்..!!!


-தேவன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக